search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெண்ணமடை குளம்"

    வெண்ணமடை குளம் தற்போது முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு படகு சவாரி விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தென்காசி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். கேரளாவில் கடந்த மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதால் குற்றால சீசனும் அப்போதே தொடங்கி விட்டது.

    சீசன் தொடங்கிய சில நாட்களில் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பின்பு சில நாட்கள் தண்ணீர் வரத்து குறைந்தது.

    இதையடுத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குற்றாலம் மலைப் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மெயினருவி மற்றும் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த அருவிகளில் குளிக்க தொடர்ச்சியாக 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தடை நீக்கப்பட்டது.

    தற்போது குற்றாலம் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மெயினருவி, ஐந்தருவிகளில் நேற்று மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இன்று வெள்ளம் குறைந்தது. மெயினருவியில் ஆர்ச்சை தொட்டப்படியும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் சாரல் மழையில் நனைந்தபடி அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் வரும் தண்ணீர் வரத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ஐந்தருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிகளவில் கொட்டி வருவதால், படகு சவாரி நடக்கும் வெண்ணமடை குளத்திற்கு தண்ணீர் வரத்தொடங்கியது. அந்த குளம் தற்போது முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு படகு சவாரி விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படகு சவாரிக்காக பழைய படகுகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதே போல் புதிதாக 20 படகுகளும் வந்துள்ளன. ஐந்தருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி நடக்கும் என நினைத்து படகு குழாமுக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் படகு சவாரி தொடங்கப்படாததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். ஆகவே அங்கு விரைவில் படகு சவாரி தொடங்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    ×